Sunday, June 8, 2025

மயில் மற்றும் குயில் | குட்டி கதை | Tamil bed-time story for Children

 என்ன குழந்தைகளே, இன்று ஒரு குட்டி கதையை பார்ப்போமா!!! 

ஒரு அழகான பசுமை வனத்தில், மயில் மற்றும் குயில் வாழ்ந்து  வந்தன. அவை இரண்டும் மிகவும் நல்ல நண்பர்கள்.

ஒவ்வொரு நாளும், அவை ஒரே மரத்தில் அமர்ந்து, பாடல்களைக் பாடியும் , நடனங்கள் ஆடியும்  மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம், மயில் தனது வண்ணமயமான தோகைகளை விரித்து பெருமையாகச் சொன்னது:
“என் நீல-பச்சை தோகைகளைக் பார்! இந்த காட்டிலேயே நான்தான் அழகான பறவை. ஆனால் குயிலே, உன் இறகுகள் கருப்பாக இருக்கின்றன!”

இதைக் கேட்ட குயிலுக்கு மிகவும் வருத்தம் அடைந்தது. குயிலின் கண்களில் கண்ணீரூம் தோன்றியது, ஆனால் எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள், மயில் தன் வண்ண தோகையுடன்  ஆடிக்கொண்டும், உரக்கக் பாடிக்கொண்டும் இருந்தபோது, குயில் சொன்னது:
“உனக்கு அழகான தோகைகள் இருக்கலாம், ஆனால் உன் குரல் மிகக்  கேவலமாக இருக்கிறது. எல்லோருக்கும் என் பாடல்கள் தான் பிடிக்கும், உன்னுடையது இல்லை!”

இப்போது மயில் வருத்தம் அடைந்தது. அது ஆடுவதை நிறுத்தி விட்டது, மிகவும் சோகமாய் ஆனது.

அன்றைய நாளிலிருந்து, இருவரும் பேசுவதை நிறுத்தினார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டதால், அவர்கள் பாடல்களையும் விளையாட்டுகளையும் விட்டுவிட்டார்கள். சில நாட்களில் இருவரும் சோகமாகிப் போய் உடல்நலக்குறைவுற்றனர்.

ஒருநாள், அந்தக் காட்டிற்கு ஒரு பெரிய மனிதர் வந்தார், அவ்விரு சோகமான பறவைகளையும் கவனித்தார்.

அவர் மெதுவாகச் சொன்னார்:
“மயிலே, உன் தோகைகள் இயற்கை தந்த ஒரு அருமையான பரிசு. குயிலே, உன் குரல் இயற்கை தந்த ஒரு பொக்கிஷம். இந்த  இயற்கையின் பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் ஒப்பிடக் கூடாது. உங்கள் திறமைகள்  உலகை மகிழ்விக்க பயன்படுத்துங்கள்—மற்றவர்களை காயப்படுத்த அல்ல.”

பறவைகள் ஒருவரைப் ஒருவர் பார்த்தன. தங்களது தவறை உணர்ந்தன.

“உன் இறகுகளை கிண்டல்  செய்தமைக்கு மன்னிச்சுக்கோ,” என்றாள் மயில்.

“உன் குரலைச் சிறுமை செய்தமைக்கு நானும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றது குயில்.

பறவைகள் அன்புடன் அணைத்துக் கொண்டு, இனிமேல் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்று வாக்குக் கொடுத்தன.

அன்றிலிருந்து, குயில் இனிமையான பாடல்களைப் பாடியது, மயில் தனது ஒளிரும் தோகையை உயர்த்தி ஆடியது. 

காடு  மீண்டும் இசை, வண்ணம், சிரிப்பால் நிரம்பியது.


குழந்தைகளே, இதில் இருந்து நாம் புரிந்துக்கொள்ளவேண்டியது 

“ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உள்ளது. ஒப்பிடாதீர்கள்”